தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அநுரகுமாரவின் தேர்தல் வாக்குறுதிகளை தாம் பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆராய்ந்துள்ளதாகவும், அந்த முன்மொழிவுகளின்படி அடுத்த ஆண்டு அவர்களின் செலவு 8.9 டிரில்லியனாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரிச்சுமையைக் குறைப்பது போன்ற ஒரே தடவையில் செய்ய முடியாத சாத்தியமற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் வருமானம் 4.9 டிரில்லியன் ஆக இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 4 டிரில்லியன் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து உண்மையான பொருளாதாரத் திட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் என முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி, தான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மக்களைத் தொடர்ந்தும் அவர் ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
நேற்று பிற்பகல் ஹங்குரன்கெத்தவில் நடைபெற்ற ரணிலால் இயலும் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், உணவு, மருந்து, எரிபொருள் வழங்க முடியாமல் மக்கள் தவித்த போது இந்த நாட்டைப் பொறுப்பேற்று மக்களை வாழ வைக்கும் முதன்மைப் பொறுப்பை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தள்ளார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தான் ஆரம்பித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இயலும் ஸ்ரீலங்கா நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு வேலைத் திட்டம் எனவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஆணையை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.