அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிறைவுக்குவந்த அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்க்கு எதிராக அவர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன்முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இது அவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 2024 ஆம் ஆண்டிலேயே அவர் தனது இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று இருக்கிறார். முன்னதாக அவர் 2024 அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருந்தார்.
இதன் மூலம் ஒரே சீசனில் அவுஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை பெற்ற நான்காவது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். இதற்கு முன் மாட்ஸ் விலாண்டர், ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் ஆகிய மூவர் ஒரே சீசனில் அவுஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களை வென்றிருந்தனர்.
23 வயதான ஜானிக் சின்னர் பின்னர் தற்போது ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் தர வரிசையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் அவர் செய்துள்ளார். இந்த ஆண்டு ஜானிக் சின்னர் தான் ஆடிய 60 போட்டிகளில் 55 வெற்றிகளையும், ஐந்து தோல்விகளையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் ஆகிய மூன்று ஜாம்பவான்களுக்கு அடுத்து ஜானிக் சின்னர் டென்னிஸ் உலகின் புதிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார்.