NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க குடியுரிமை தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை..!

அமெரிக்காவில் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை இரத்து செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய அறிவிப்புக்கு அந்நாட்டு சியாட்டில் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்ட நிலையில், பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை இரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும்போது அவர்களுக்கு அங்கு குழந்தை பிறந்தால், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்டம் தற்போது நடைமுறை உள்ளது.

எனினும், டொனால்ட் ட்ம்ப்பின் அறிவிப்பு அமுலுக்கு வரும் பட்சத்தில், இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் யாரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என்பதுடன், அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, டிரம்ப்பின் உத்தரவை அமுல்ப்படுத்துவதற்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles