அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதில் ஜனனாயகக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ஜோ பைடனும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.
கடந்த ஜூன் 28ஆம் திகதி ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருக்கும் இடையில் நேரடி விவாதம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் ஜோ பைடன் மிகவும் தடுமாறிய நிலையிலேயே பேசினார். சில நொடிகள் எதுவும் பேசாமல் ஸ்தம்பித்து நின்றார்.
END OF THE QUOTE என்ற உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததைக் கூட பைடன் சேர்த்து வாசித்தமையானது, இந்த நிலைமையில் பைடன் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதிலாக ஜனாதிபதி வேட்பாளராக நிற்க வேண்டுமெனவும் சிலர் விரும்புகின்றனர்.
இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவுள்ள கமலா ஹாரிஸூக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் – பைடன் இருவரில் 49 சதவீதமானோர் ட்ரம்புக்கும் 43 சதவீதமானோர் பைடனுக்கும் ஆதரவாகவுள்ளனர்.
அதேசமயம் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவரில் 47 சதவீதமானோர் ட்ரம்புக்கும் 45 சதவீதமானோர் கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கமலா ஹாரிஸூக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உள்ளதால், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உள்ளதாக இதிலிருந்து தெரிய வருகிறது.