NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, அமைச்சர் சந்திரசேகரும், அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்யுமாறும், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கின்றார்.

இதேவேளை, கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும், இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles