அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பயண வழிகாட்டல் நாட்டின் சுற்றுலாத்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஹோட்டல் உரிமையாயளர்களால்
தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தற்போது நடைமுறையிலிருக்கும் இலங்கை தொடர்பான அவுஸ்திரேலியாவின் பயண வழிகாட்டல் கடந்த மேமாதம் வெளியிடப்பட்டது. அதில் இலங்கை தொடர்பான வழிகாட்டலை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், அதற்கமைய இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் தொடர்ந்து உயர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்பட்ட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக்கூடும் எனவும், சில சந்தர்ப்பங்களில் அவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் அவ்வழிகாட்டலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இலங்கையில் இவ்வாண்டு ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் நடைபெறக்கூடும் என்பதுடன், அவை வன்முறையாக மாறக்கூடும். எனவே போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறான போராட்டங்கள் பொதுப்போக்குவரத்து சேவைக்கு இடையூறையும், போக்குவரத்து நெருக்கடியையும் தோற்றுவிக்கக்கூடும். ஆகவே உள்நாட்டு அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஊடக செய்திகளைப் பார்வையிடுங்கள்’ என அப்பயண வழிகாட்டலில் வலியுறுத்தப்பட்ட்டுள்ளது.
அதன்படி இப்பயண வழிகாட்டல் இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்பும் அவுஸ்திரேலியப்பிரஜைகளின் மனதில் அச்சத்தை விதைப்பதாகவும், அது நாட்டில் சுற்றுலாத்துறையிலும், தமது வர்த்தக செயற்பாடுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இலங்கையின் ஹோட்டல் உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை,அவுஸ்திரேலியாவின் தற்போதைய பயண வழிகாட்டலானது முன்னைய வழிகாட்டலின் தொடர்ச்சியேயன்றி, அதில் புதிதாக எதுவும் உள்ளடக்கப்படவில்லை என அவுஸ்திரேலிய உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.