ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே புகைப்பிடிக்கும் வீதம் அதிகரித்து வருகிறது எனவும் இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது எனவும், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியுமாக இருந்தாலும் சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயானது உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணமாக இருப்பதாகவும் இந்த நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோயானது சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுவதாகவும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் 45 வயதுக்குப் பின்னர் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 சதவீதம் பேர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, காற்று மாசுபாடு மற்றும் முகக்கவசங்களை அணிவதை தவிர்த்தல் ஆகியனவும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றதோடு, நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் சளி போன்ற சிறிய நோய்களுக்கு அதிக உணர்திறன் ஆகியனவும் முக்கிய அறிகுறிகளாக இருப்பதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா தெரிவித்துள்ளார்.