(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜப்பான் அரசின் கடனுதவியில் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி என்ற புதிய பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைப்பொருட்களுனக்கு அடிமையானவர்கள் திருடிச்சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் இரகசியமாக கான்கிரீட் மூடிகளை உடைத்து கான்கிரீட் மூடிகளுக்குள் இருந்த செப்பு கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தற்போது 286 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிக திறன்மிக்க மின்சார வயர்களை கூட அறுத்து எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகளை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்கையில், புதிய களனி பாலத்தின் கேபிள் வயர்கள் துண்டிக்கப்படுவதால் அந்த பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தனது தலைமையில் பாராளுமன்றத்தில் கூட்டப்பட்ட தேசிய பாதுகாப்பு உபகுழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொறுப்பான துறைகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலைமையின் அடிப்படையில் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா – கொழும்பு நெடுஞ்சாலையில் மின்சார கேபிள்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு வலைகள் கூட வெட்டி இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.