நாட்டில் சுமார் 100 காட்டுப் பன்றிகள் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளன. யால மற்றும் வில்பத்து பூங்காக்களிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற நகரங்களிலும் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.
தற்போது காட்டுப் பன்றிகளுக்குள் இந்நோய் வேகமாகப் பரவி வருவதாகவும் அதன் தாக்கம் நாட்டில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கையை முற்றாகப் பாதிக்கக் கூடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் பன்றிகளுக்கு ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் மற்றும் நோய்த்தாக்கம் பரவியதன் காரணமாக இலங்கையில் பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசேட வர்த்தமானி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான பண்ணைகளில் இந்நோய் பரவியிருந்த நிலையில், உயிரிழந்த பன்றிகளின் உடல்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் கூறுகையில், பூங்காவிற்கு நபர் ஒருவர் கொண்டு சென்ற பன்றியின் இறைச்சியை காட்டுப்பன்றி சாப்பிட்டதால் அந்த விலங்குகளுக்கு நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வனப் பூங்காக்களுக்குள் பன்றி இறைச்சியை எடுத்துச் செல்வதை வனவிலங்குகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.