NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

• இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று திறந்து வைப்பு – மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி… !

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகில் கட்டப்பட்ட 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவிலான பிரமாண்ட புதிய பாராளுமன்றம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உத்தியபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அன்படி, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது.

அதன்படி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று காலை சிறப்பு யாகசாலை பூஜையுடன் திறப்பு விழா ஆரம்பமானது.

மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்படுகிறது.

இதற்காக யாக சாலை பூஜையில் செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

செங்கோல் முன்பாக பிரதமர் மோடி விழுந்து வணங்கியதை அடுத்து அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் செங்கோலை வழங்கினர்.

செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார்.
அதன் பின்னர் ஓதுவார்கள் முன் சென்று தமிழ் மறைகள் ஓத, இசை வாத்தியங்கள் முழங்க, பிரதமர் மோடி செங்கோலை ஏந்தியபடி புதிய பாராளுமன்றத்திற்குள் சென்றார்.

அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவி விளக்கேற்றினார்.

அதன் பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் பாராளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் கௌரவித்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளார்.

இதேவேளை, இந்த 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை, மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் 888 பாராளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இந்திய கட்டிட கலை பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles