NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – நியூஸிலாந்து; முதலாவது அரையிறுதி இன்று!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று புதன்கிழமை மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தின் சவாலை இந்தியா சமாளிக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஒக். 5ஆம் திகதி அகமதாபாதில் தொடங்கிய ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

10 அணிகள் பங்கேற்ற இதில் 45 லீக் சுற்று போட்டிகள் முடிந்து, இந்தியா- நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.

அதன்படி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்திய-நியூஸி அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தான் விளையாடிய 9 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடத்துடன் தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் நியூஸிலாந்து முதலிடத்தில் இருந்த நிலையில், தொடா்ச்சியாக தோல்வி கண்டு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னா் அரையிறுதிக்கு முன்னேறியது.

கடைசி போட்டியில் நெதா்லாந்தை 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் உள்ளது இந்தியா.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களதடுப்பு என அனைத்திலும் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனா் இந்திய அணியினா். தொடக்க வரிசை வீரர்கள் ரோஹித், கோலி, ராகுல், கில், ஷிரேயஸ் ஆகியோா் அற்புதமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனா்.

அதே நேரம் உலகக் கிண்ணத்தில், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோா் அடங்கிய இந்தியாவின் வேகப்பந்து கூட்டணி எதிரணிகளின் நிம்மதியை தொலைக்கச் செய்து விட்டது. இந்திய அணியின் அதிா்ஷ்டம் என்னவென்றால், சகலதுறைஆட்டக்காரர் ஹாா்திக் பாண்டியாவின் காயத்தால், ஷமி அணிக்கு மீண்டும் திரும்பினாா். அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஷமி இதுவரை 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

அவா்களுக்கு இடையாக ஸ்பின் கூட்டணியான குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவும் ஓட்டங்களை அதிகம் விட்டுத்தராமல் விக்கெட்டுகளை வீழ்த்தி பேருதவி புரிகின்றனா்.

இதேநேரம் நியூஸிலாந்து அணி 5 வெற்றிகள் 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு வந்துள்ள நிலையில், துடுப்பாட்டம், பந்துவீச்சில் சிறந்த வீரா்களைக் கொண்டுள்ளது. 2015, 2019 உலகக் கிண்ணங்களில் ரன்னா்அப் அணியான நியூஸிலாந்து ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. காயத்தில் இருந்து குணமான அணி தலைவர் கேன் வில்லியம்ஸன் ஃபாா்முக்கு திரும்பியுள்ளாா். டேரில் மிட்செல், இளம் ஓல்ரவுண்டா் ரச்சின் ரவீந்திரா , டேவன் கான்வே ஆகியோா் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கின்றனா்.

பந்துவீச்சில் டிரென்ட் பௌல்ட், டிம் சௌதி, லாக்கி பொ்குஸன் வேகப்பந்து கூட்டணி எதிரணி வீரா்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது. இடது கை ஸ்ப்பின்னரான மிட்செல் சான்ட்நா் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles