ஹிஜ்ரி 1444 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னர் பிறைக் குழுத் தலைவர் மௌலவி அஸ் ஸெய்க் ஹிஸாம் (பத்தாஹி) தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டதால் நேற்றுடன் புனித ரமழானை 29 ஆக பூர்த்தி செய்து, இன்று புனித நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்களை கொண்டாடுமாறு பிறைக்குழு ஏகமனதாக அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டலத் திணைக்கள பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.