ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான உதவிகளை வழங்கத் தயாரெனவும் அன்ட்ரு பெட்றிக் உறுதியளித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் பிரித்தானியாவில் காணப்படும் முறைமை முக்கியமானது என்றும், அந்த முறையில் ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானிய பாராளுமன்ற முறைமைகள் குறித்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் வலியுறுத்தினார்.


