இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (03) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக 10 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு நிலைமைகளை ஆராய்ந்து நாளைய கூட்டத்தில் அறிக்கைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இம்முறைப் பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டைத் தமிழரசுக் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
கடந்த பொதுத் தேர்தல்களில் ஏனைய சில தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் பங்காளிக்கட்சிகள் விலகிச் சென்றிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி குறித்த கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகள் தற்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அழைப்பைப் புறக்கணித்துள்ளன.
இந்தநிலையில் இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்புரிமையை உறுதி செய்து கொள்வதற்காகத் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற பல கட்சிகள் ஒன்றித்து ஐக்கியமாகப் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு நாளை இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பயன்படுத்திய சங்குச் சின்னம், இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.