ஆதவன் தொலைக்காட்சி நேற்று முதல் தனது ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களுக்கு உறவு பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறான பின்னணியை கொண்ட ஆதவன் தொலைக்காட்சி நேற்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்குகொண்டணர்.
3 நேர பிரதான செய்திகளையும் மணித்தியால செய்திகளையும் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.
ஆதவன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கு தமிழ் FM அலைவரிசை தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.