திருகோணமலை – சம்பூரில் செயற்படவுள்ள இலங்கை – இந்திய கூட்டு முயற்சியான சூரிய மின்சார உற்பத்தி நிலையத்தின் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் அலகு ஒன்றுக்கு, 5.97 அமெரிக்க சென்ட்ஸ் மின்சாரம் விற்பனை செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுமார் 7 அமெரிக்க சென்ட்ஸ்களுக்கு இந்த விற்பனை இடம்பெறுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 6.69 அமெரிக்க சென்ட்ஸ்களாக குறைக்கப்பட்டது.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் அதனை 5.97 அமெரிக்க சென்ட்ஸ்களில் பெறுவதற்கு அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது நிகழ்வு ஒன்றில் கலந்தகொண்ட போது தெரிவித்தார்.
அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய வெப்ப மின் கழகம் இடையேயான கூட்டு முயற்சியின் கீழ், சம்பூரில் 135 மெகாவோட் சூரிய மின்சார உற்பத்தி நிலையம் அமையவுள்ளது என்றார்.
இலங்கை மின்சார சபை கூடுதல் கடனில் சிக்க விரும்பாததால் இந்த திட்டத்துக்கான முதலீடுகளை அழைத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதில் கொள்முதல் விலை முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.