லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் இணைந்து 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டிக்காக நாடளாவிய ரீதியாகவும் உள்ள திறமையான காட்பந்தாட்ட வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவது இந்த போட்டியின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.
அனைத்து மாவட்ட இளைஞர்களையும் உள்ளடக்கிய திறமையான தேசிய அணி ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே இந்த போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சமூகம் சார்ந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது தற்போது விளையாட்டுத் துறையிலும் கால் பதித்துள்ளமையானது விசேட அம்சமாக கருதப்படுகிறது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.