இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.
மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு கட்டுரையில் இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும் இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.