இளைஞர்களை கெடுக்கக்கூடிய வகையில் பணத்தை கொடுத்து அவர்களை வாக்கு போடச் சொல்லி பல கட்சிகள் இன்று செயல் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. சுய சிந்தனையை வெளிப்படுத்த முடியாதவாறு பணத்தை திணித்து அவர்களது சுய விருப்பின் பேரில் உண்மையான மக்கள் சேவகர்களுக்கு தமது வாக்கினை செலுத்த முடியாதவாறு பல கட்சிகள் இன்று செயல்பட்டு வருவதாக சசிகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சரான மனோ கணேசனின் தமிழர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் கம்பஹா மாவட்ட வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் வத்தளை மாபொலை மாநகர சபையின் உறுப்பினர் சுப்பிரமணியம் சசிகுமார் இன்றைய தினம் வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வூடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கம்பஹா மாவட்டத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே பலர் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த மக்கள் சேவைகளை செய்திருந்தார்கள், ஆனாலும் அவர்களால் பாராளுமன்றம் செல்ல முடியாது இருந்தது, காரணம் தமிழர்களின் வாக்கு சிதறடிக்கப்பட்டமேயே ஆகும். ஆகவே இம்முறை இந்த தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை கம்பஹா மாவட்ட மக்கள் உணர்ந்து உறுதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன் என்றார்.
மேலும் இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.