NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இழுபறி நிலையில் பாகிஸ்தான் தேர்தல்!

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்த நாட்டில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

255 தொகுதிகளில் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் சுமாா் 100 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் பிரதமா் நவாஷ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 73 இடங்களும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பிபிபி) 54 இடங்களும் கிடைத்துள்ளன.

இந்தச் சூழலில், தோ்தலில் தங்களது கட்சி வெற்றி பெற்றதாக பிடிஐ கட்சி அறிவித்துள்ளது. புதிய அரசை அமைக்கவிருப்பதாக பிஎம்எல்-என் கட்சியும் அறிவித்துள்ளதால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

 இதற்கிடையே, கருத்துவேறுபாடுகளைக் கைவிட்டு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்கவேண்டும் என்று இராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமா் இம்ரான் கான், ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதன் காரணமாக, கட்சி வேட்பாளா்கள் அனைவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டனா்.

எனினும், இராணுவத்தின் ஆதரவு இருப்பதால் இந்தத் தோ்தலில் பிஎம்எல்-என் தலைவா் நவாஸ் ஷெரீஃப் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.இருந்தாலும், ராணுவத்தின் காய் நகா்த்தல்களை மீறி இம்ரான் கட்சி ஆதரவு வேட்பாளா்கள் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles