இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தத்தின் போது இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மனுஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா வீரசிங்கவுக்கு உரித்தான அனைத்து நட்டஈட்டு கொடுப்பனவுகளையும் அவ்வாறே செலுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இஸ்ரேலில் பணி புரிந்துவரும் எமது தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பது ஆபத்து என்றால் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றாலும் அவ்வாறு நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுமாறு இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.
அத்துடன் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.
என்றாலும் இஸ்ரேலில் மாத்திரம் அல்ல, அதற்கு அண்மித்த நாடுகளில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தினால் ஆபத்து நிலைமை இருப்பதாக இருந்தால், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்திருக்கிறோம்.
அத்துடன் எமது நாடு இஸ்ரேலுக்கோ பலஸ்தீனத்துக்காே மாத்திரம் ஆதரவான நாடு அல்ல. நடுநிலையான கொள்கையின் அடிப்படையிலேயே எமது நாடு செயற்பட்டு வருகிறது. நாங்கள் யுத்தத்துக்கு ஆதரவில்லை.
அதேநேரம் இஸ்ரேலில் விசா இல்லாமல் இருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நான் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு விசா வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். இலங்கையில் வாழ முடியாது என தெரிவித்து இங்கிருந்து சென்று சட்டவிராேதமான முறையில் அந்த நாட்டில் இருந்தவர்களுக்கு விசா வழங்குவது சட்டவிராேதமாகும்.
சட்டவிராேதமான முறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாெடுத்திருக்கும் நிலையில் அந்நாட்டு தூதுவர் தலையிட்டு விசா பெற்றுக்கொடுப்பதை நான் அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டார்.