இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பாரிய போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல்
குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும்
அதன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நெதன்யாகு
தலைமையில் புதிதாக சட்டம் ஒன்றை கொண்டுவர முயற்ச்சிகள்
முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரம்
குறையும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறவும்
இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல் நீதிபதிகள்
நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
இது நீதித்துறையை முடக்கும் செயல் என கூறி இஸ்ரேலில்
மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டங்களுக்கு
பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய
ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு
செய்துள்ளனர் . இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டு டெல்
அவிவ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.