NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈரானில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு சிறைத் தண்டனை!

ஈரானில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விளக்கமறியலில் உயிரிழந்த மாஷா அமீனி தொடர்பான செய்தியை வெளியுலகுக்கு கொண்டுவந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான இவர்கள் மீது அமெரிக்க அரசிற்கு ‘ஒத்துழைப்பு’ வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரானின் சர்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குர்து இனத்தை சேர்ந்த மாஷா அமீனி என்ற பெண், கடந்த ஆண்டு செப்டம்பரில் விளக்கமறியலில் இருந்தபோது உயிரிழந்தார்.

தலையை மறைக்கும் வகையிலான ஆடையைச் சரியாக அணியாததால் மாஷா அமீனியை பொலிஸார் கைது செய்தார்கள் என்ற செய்தியை நிலோஃபர் ஹமேதியும், மாஷா அமீனியின் இறுதிச்சடங்கு தொடர்பான செய்தியை எலாகே முகமதியும் வெளியிட்டனர். மாஷா அமீனியின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் இருவரும் ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்க அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குதல், தேசியப் பாதுகாப்புக்கு எதிராக செயற்படுதல், அரசிற்கு எதிரான பிரசாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் டெஹ்ரான் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக நீதித் துறை செய்தி இணையதளமான ‘மைஷான்’ நேற்று தெரிவித்துள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் 20 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும். இந்தப் பத்திரிகையாளர்கள் இருவருக்கும் பத்திரிகை சுதந்திரத்திரத்திற்கான விருதை அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles