NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் மீட்பு பணிகள்!

இந்தியா – உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி 2 வாரத்துக்கு மேலாக நீடிக்கிறது.

துளையிடும் அமெரிக்க ‘ஆகர்’ எந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், இடிபாடுகளின் இடையூறுகளால் துளையிடும் பணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

இடிபாடுகள் இடையே சிக்கிய ‘ஆகர்’ எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாற்று நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இவ்வாறு மொத்தம் 86 மீட்டர் தூரத்துக்கு துளையிட வேண்டியுள்ள நிலையில், நேற்று வரை 31 மீட்டருக்கு துளையிடப்பட்டதாக, இராணுவத்தின் முன்னாள் தலைமை என்ஜினீயரான ஹர்பால் சிங் தெரிவித்தார். இதன் மூலம் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் செலுத்தப்பட்டு, அதன் வழியே தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர்.

அவர்கள், இடிபாடுகளுக்குள் உள்ள 800 மி.மீ. விட்டமுள்ள குழாய்க்குள் சென்று, மண்வெட்டியால் இடிபாடுகளை வெட்டி அகற்றுவார்கள். அவர்கள் தலா 3 பேர் வீதம் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

ஆட்கள் இடிபாடுகளை அகற்றுவது நேரம் பிடிக்கும் பணி என்றாலும், வெறும் 10 முதல் 12 மீட்டர் தூரமே துளையிட வேண்டியுள்ள நிலையில், இது ஒன்றுதான் சாத்தியமான வழி என அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் முழு வீச்சில் செயல்பட்டு சுமார் 7 மீட்டர் அளவிற்கு துளையிட்டுள்ளனர். இதனால் இன்னும் 5 மீட்டர் தூரம்தான் துளையிட வேண்டியுள்ளது. இதனால், விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles