NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கு – விசாரணையில் வெளியான புதிய தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கழுத்துப்பட்டியில் (Tie) பதிவாகியிருந்த வெளிநாட்டு உயிர் மாதிரியானது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (28) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

வெளிநாட்டவரினது என சந்தேகிக்கப்பட்ட குறித்த உயிரி மாதிரியானது குற்றவியல் புலனாய்வு அதிகாரி, பொலிஸ் சார்ஜென்ட் (29541) சுனிலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக, அரசாங்கத்தின் இரசப்பகுப்பாய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

கோலை செய்யப்பட்ட தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் நண்பரான பிரையன் தோமஸ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தினேஷ் ஷாஃப்டருக்கு சிகிச்சை அளித்த தாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேரின் இரத்த மாதிரிகளை எடுத்து, இந்த அந்நிய உயிரியல் மாதிரியை அடையாளம் காண அரசாங்க இரசப்பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதில், பொலிஸ் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரி சுனிலின் இரத்த மாதிரிகளுடன் வெளிநாட்டு உயிரியல் மாதிரியை ஒப்பிட்டு பார்த்ததாக அரச இரசப்பகுப்பாய்வாளர் அறிக்கை அளித்திருந்தார்.

இந்த விசாரணை தொடர்பாக, உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் தாயாரிடம் இருந்து பெறப்பட்ட மரபணு மூலக்கூற்று மாதிரிகள் போதுமானதாக இல்லாதமையால், தாயிடமிருந்து மீண்டும் மரபணு மாதிரிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியில் தரவுகளை சேமித்து வைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசியை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஜூலை 11ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Share:

Related Articles