T20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (04) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
நடந்து முடிந்த T20 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கிண்ண்தை வென்றிருந்தது.
இந்திய அணி இறுதிப் போட்டியில் ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்திய அணியினர் நாடு திரும்ப முடியாமல் போனது.
இந்நிலையில், வானிலை ஓரளவு சீரடைந்த பின்னணியில் இந்திய அணியினர் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்திய ஊடகங்களின்படி இன்று அதிகாலை அவர்கள் புதுடெல்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கரீபியன் தீவுகளில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோகித் சர்மா தலைமையிலான அணி நேற்று தங்கள் நாட்டுக்கு புறப்பட்டதாக தகவல் வெளியானது.
சிறப்பு விமானத்தில் அழைத்துவரப்பட்ட இந்திய அணியினர் இன்று காலை சுமார் 6:20 மணிக்கு புதுடெல்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில், காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அணியினர் சந்திக்கவுள்ளனர். அதன் பிறகு ரோஹித் தலைமையிலான அணி மும்பை செல்ல உள்ளது.
மேலும், இன்று பிற்பகல் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.