இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், உலகிலேயே சிறந்த கப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மாபெற்றுள்ளார்.
உலகின் சிறந்த கப்டன்களாக அறியப்படும் ரிக்கி பொண்டிங், ஹன்சே குரோனியே, ஸ்டீவ் வாஹ், விராட் கோலி, டோனி ஆகியோரை முந்தி ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் கப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா கப்டனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் கப்டனாக அவரது நூறாவது போட்டி ஆகும். கப்டனாக தனது நூறாவது போட்டியில் 87 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரோஹித் சர்மா. இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் கப்டனாக நூறு போட்டிகளில் 74வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் கப்டனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் கப்டனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
1.ரோஹித் சர்மா – 74 சதவீதம்
2.ரிக்கி பொண்டிங் – 70.5 சதவீதம்
3.ஆஸ்கார் ஆப்கன் – 69.6 சதவீதம்
4.ஹன்சே குரோனியே – 67 சதவீதம்
5.ஸ்டீவ் வாஹ் – 66.6 சதவீதம்
இந்திய அணியின் கப்டனாக இருந்தவர்களில்,
விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடனும்
டோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.