அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
இந்த மனு மீதான விசாரணை, மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
மனுதாரரின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் நேற்று முடிவடைந்த நிலையில், மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மனுக்கள் தொடர்பான வாதங்களை சட்டமா அதிபர் முன்வைக்கவுள்ளார்.
இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், அவை நிறைவேற்றப்பட வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கக் கோரி குறித்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.