(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
காலாவதியான உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மீள இணைப்பதற்கான உத்தேச சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி இடமளிக்காது என கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் இன்னும் நடைபெறாமையால் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலத்தை ஆளும் கட்சி முன்வைத்துள்ளது. இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளுராட்சி அமைப்புகளில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த உரிமை உண்டு.
எனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தின் மூலம் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது. மக்கள் ஆணையின் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். மக்கள் ஆணையை நிறைவேற்றாத அரசை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், ஜனநாயக நாட்டில் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.