NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்!

உள்ளூர் கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2023 பருவகாலத்துக்கான இரண்டாம் கட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் முதல் பல புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி, இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள SLC மேஜர் லீக் T20 தொடரில் இருந்து இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வழிகாட்டுதலின்படி, முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களை மட்டுமே உள்ளூர் கழகங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு கழகமும் இம்முறை இரண்டு வெளிநாட்டு வீரர்களை மாத்திரம் ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டித் தொடர்கள் குழுத் தலைவர் சமன்த தொடன்வல கருத்து தெரிவிக்கையில்,

‘இலங்கைக்கு வந்து விளையாடும் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் முதல்தர போட்டிகளில் ஆடிய வீரர்களாக இருக்க வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளூர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களை விளையாட அழைத்து வருகிறோம். 44 உள்ளூர் வீரர்களுக்குப் பதிலாக தான் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, கிரிக்கெட் கழகங்கள் அனைத்தும் ஒரு சாதாரண வெளிநாட்டு வீரரை அழைத்து வந்து விளையாடுவதில் பயனில்லை.

எனவே, இந்த ஆண்டு முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடாத எந்தவொரு வெளிநாட்டு வீரரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, கிரிக்கெட் கழகங்கள் தாம் பதிவு செய்த வீரர்களின் தரவுகளை சரிபார்த்து அனைத்து தகவல்களையும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து முதல்தரப் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு அதன்மூலம் வெளிநாடுகளில் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்கள். அதேபோல, இதற்குமுன் சராசரி மட்டத்திலான வெளிநாட்டு வீரர்கள் கழகங்களுக்கு பணம் கொடுத்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினர். அதை நான் கண்டுபிடித்த பிறகு தான் குறித்த நடைமுறையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். சில கழகங்கள் இந்த தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவித்த போதிலும் இனி ஒன்றும் செய்ய முடியாது. உள்ளூர் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவது தான் எமது பணி. தேவையான முடிவுகளை எடுக்காவிட்டால், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த முடியாது. இது இலங்கை கிரிக்கெட்டின் நன்மைக்காகவே எடுக்கப்பட்ட முடிவு” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இப்புதிய வழிகாட்டுதல்களின்படி வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத் தொகை குறிப்பிட முடியும். இதில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒரு வீரருக்கு மூன்று நாட்கள் போட்டிக்கு குறைந்தபட்ச தொகையாக 15 ஆயிரம் ரூபாவும், ஒருநாள் போட்டிக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும்.

இந்த அனைத்து கொடுப்பனவுகளையும் ஒன்லைன் மூலம் வீரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிட்ட பின்னர், பணம் செலுத்திய அனைத்து தகவல்களும் இலங்கை கிரிக்கெட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்தவகையில், கழகங்கள் வீரர்களுக்குப் பணம் கொடுக்காமல் தவறான தகவல்களைச் சமர்ப்பிக்க முடியாது. இந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எனது முக்கிய நோக்கம் வீரர்களின் தேவைகளை கண்டறிவதாகும்.

வீரர்களின் சம்பளம் மிக முக்கியமான விடயம். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட் பேரவை வீரர்களுக்காகவே பணத்தை ஒதுக்குகின்றது. அதிகாரிகளுக்காக அல்ல. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு உள்ளூர் T20 கிரிக்கெட் தொடர் மே 27ஆம் திகதி முதல் ஜூன் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் 22 அணிகள் 4 குழுக்களாக மோதுகின்றன.

அந்த போட்டியின் பின்னர், மூன்று நாட்கள் போட்டிகள் ஜூன் 16 முதல் ஜூலை 23 வரை நடைபெறும். அந்தக் காலப்பகுதியில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் உள்ளூர் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, லங்கா பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியின் பின்னர் உள்ளூர் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 10ஆம் திகதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகும். அதன் பிறகு 2023ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடையும்.

Share:

Related Articles