(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மொனராகலை – ஊவா – குடாஓயா கொமாண்டோ ரெஜிமன்ட் பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியின் போது 28 வயதுடைய நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியத்தலாவை பிரதேசத்தில் வசிக்கும் இவர், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி ஊவா-குடாஓயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது, குழு ஸிப்லைனிங் உட்பட பல நடைமுறை நடவடிக்கைகளில் பங்கேற்றது. ஊயிரிழந்த நபர், ஸிப்லைனிங் நடவடிக்கையில் கடைசியாக பங்கேற்றதால் நிலைத்தடுமாறி கீழே உள்ள ஏரியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்தின் கருத்துப்படி, ஏரியின் சேறும் சகதியுமான பகுதியில் குறித்த நபர் விழுந்தமையால் உயிரிழந்தவரைக் கண்டுபிடிக்க இராணுவத்திற்கு சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் தேவைப்பட்டது.
குறித்த இளைஞனை உடனடியாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிசெய்தனர்.
இந்த மரணம் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்தவரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.