பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் தனது காதலனை சந்திக்க இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் எல்லை தாண்டி சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி முகமை நிறுவனமான ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியை சேர்ந்த 35 வயது பெண்ணான அஞ்சு, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வசித்து வரும் 29 வயதான தனது காதலன் நஸ்ருல்லாவை சந்திக்க அங்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் முறையான விசாவுடன் அஞ்சு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 30 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல். டெல்லியில் இருந்து வாகா வழியாக இஸ்லாமாபாத்துக்கு அவர் வந்துள்ளார்.
நஸ்ருல்லா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அஞ்சு தெரிவித்துள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
ஆனால், அஞ்சு பாகிஸ்தான் நாட்டை பார்ப்பதற்கு வந்துள்ளார் என நஸ்ருல்லாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எல்லை தாண்டி வந்த அஞ்சுவை விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.