உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
ஒலிம்பிக் திருவிழாவையொட்டி பாரிஸ் நகரமே களைகட்டியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என போட்டிபோட்டு களமிறங்கும் ஆடுகளம் இது. ஒவ்வொரு வெற்றியிலும் மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு பெருமை சேர்க்கும் பதக்கங்கள் இவை அனைத்தையும் ஒன்றிணைகிறது ஒலிம்பிக்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை (26) ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பிரேக் டான்ஸ் எனப்படும் நடனப் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளமை நடனக் கலைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.
அந்தவகையில் இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 இலங்கை வீர – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்கள் அறுவரும் நேற்று பாரிஸு க்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.