கம்பஹா மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 4 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
இதனால், டெங்கு அபாயத்தைக் கட்டுக்குள் கொண்டுவர நாளை கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒரு நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் லலித் கமகே தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கம்பஹா மாவட்டம் கடந்த ஒரு சில ஆண்டுகளாக டெங்கு அதி உயர் அபாய மிக்க வளையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளதோடு, 4 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெங்கு அபாயத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு விசேட வேலைத்திட்டங்களை செயல்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, கம்பஹா மாவட்ட அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் உள்ள சுமார் 1,177 கிராம பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை முதல் நண்பகல் வரை சகல கிராமங்களிலும் உள்ள தலா 50 வீடுகளையும், பொது இடங்களையும் பரிசோதிப்பதுடன் டெங்கு பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் லலித் கமகே தெரிவித்துள்ளார்.