கம்போடியா – வியட்நாம் இடையே QR குறியீடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எப்பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புதிய கட்டண முறையானது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனவும், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் நாணயப் பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
இந்த எல்லை தாண்டிய QR குறியீட்டுக் கட்டண முறையானது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வியட்நாமில் கம்போடிய நாணயத்தில் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் உதவுகிறது. அதேபோல் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் வியட்நாமின் நாணயமான டாங்கைப் பயன்படுத்தலாம். இதற்காக சுமார் 1.8 மில்லியன் கம்போடிய வணிகர்கள் வழங்கிய KHQR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் தவிர தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுடனும் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் தொடர்பான QR குறியீடு லிங்கை கம்போடியா வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.