கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய விரிவுரைகள், மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய உத்தேச வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அதனைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையுடன் தொடர்புடைய வினாக்களை ஒத்த வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களைப் பெற்றுத்தருவதாகச் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்களை நேரடியாகவோ அல்லது நிகழ்நிலை ஊடாகவோ விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடை செய்யப்பட்ட குறித்த காலப்பகுதியில் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.