NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பு – 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மத்திய மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்களையே மாகாண கல்வி அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் சிலர் சுற்றறிக்கைக்கு எதிராக மேலதிக வகுப்புகளை நடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து மாகாண கல்வி செயலாளர் மேனகா ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை மட்டத்தில் வினாத்தாள்களை தயாரித்து நடத்தப்படும் தவணை பரீட்சைகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தங்களிடம் மேலதிக வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிக புள்ளிகளை வழங்குவதாகவும், பாடசாலை வகுப்புகளில் அவர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் வருகை தராத பிள்ளைகளின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கல்வி அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

தற்போது, மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படும் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை அடுத்த வருடம் முதல் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சில ஆசிரியர்களின் பாரபட்சமான நடத்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Related Articles