வவுனியா வடக்கு நெடுங்கேணிநகர், சுற்றுவட்டப்பாதை உள்ளிட்ட இடங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போது தேங்காய் விலை அதிகரிப்பிற்கு குரங்குகளும் ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காட்டுயானைகளையும், குரங்குகளையும் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்; தெரிவித்துள்ளார்.
வவுனியாவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நெடுங்கேணி நகரில் பிரதான சுற்றுவட்ட வீதியில் யானை நடந்து செல்வதாக மக்களால் முறையிடப்பட்டுள்ளதாகவும், நகரில், சந்திகளில் மக்கள் நடமாடுவதையே அவதானித்திருக்கின்றோம், ஆனால் இங்கு நகரையும், சந்திப் பகுதியையும் காட்டு யானைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன என அவர் தெரிவித்தார்.
மேலும், வன்னியின் பலபகுதிகளிலும் இதேபோல் காட்டுயானைப் பிரச்சினைகள் காணப்படுவதுடன், யானையை வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்து வன்னிப் பகுதிகளில் விடுவதாகவும் மக்களால் முறையிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே காட்டுயானைகளையும், குரங்குகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யானைத் தாக்குதலுக்கு இலக்காகி தமது மக்கள் பலர் இறந்திருப்பதாகவும், எனவே, யானைகளைக்கட்டுப்படுத்த கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இக் கருத்தை குறித்த பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.