கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, கடுவெல நீதவான் சானிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கொலை செய்த குழுவினருக்கு தங்குமிட வசதி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தென்மேற்கு குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, ஜூலை 8ஆம் திகதி அத்துருகிரியில் வைத்து கிளப் வசந்த சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் கடந்த 28ஆம் திகதி பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.