NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1679 பேர் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரதிபுரம், தொண்டமான்நகர், மாவடியம்மன், கனகபுரம், கண்ணகிபுரம், இராமநாதபுரம், திருநகர், கனகாம்பிகைக்குளம், திருவையாறு, ஜெயந்திநகர் பகுதிகளிலேயே இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிரமந்தனாறு, கோக்கன்கட்டு, தர்மபுரம் கிழக்கு, உமையாள்புரம் பகுதிகளில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிப் ஒரு வீடு பகுதி சேதத்துக்குள்ளானதுடன், அவ்வீட்டில் வசித்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிசார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

Share:

Related Articles