(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பத்தலகொட தோட்டத்தில் வசிக்கும் 300 மலையக தமிழர்களை குறித்த தோட்டத்தை விட்டு வெளியேற்ற தோட்ட உரிமையாளர் நடவடிக்கை மேற்கொள்வதாக தோட்ட மக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த 150 வருடங்களுக்கு மேலாக 4 தொடக்கம் 5 தலைமுறையாக குருநாகல் பத்தலகொட தோட்டத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி மலையக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், தோட்டத்தில் உள்ள காணிகளை துப்பரவு செய்தமைக்காக 6 பேருக்கு எதிராக தோட்ட உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேவேளை, மூன்று நாட்களில் தோட்டத்தை விட்டு அனைவரையும் வெளியேற்றுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தோட்டத்தை விட்டு வெளியேற்றுவேன் எனவும் தோட்ட உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இறம்பொடை பிரதேசத்திலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவான நிலையில், இவ்வாறு தோட்டத்தை விட்டு வெளியேற்ற முயல்வது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.