NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருந்தூர்மலை விவகாரம் – இரு எம்.பிக்களுக்கு பிணை!

குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி தொடர்ந்த வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

தமது வழிபாட்டு உரிமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக குறித்த விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சுமேத தேரர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவித்தல் விடுக்கப்பட்டபோதும், கடந்த வழக்கு தவணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. முன்னிலையானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, அவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கில் அவர்கள் முன்னிலையாக சென்றபோது, அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியதாக பொலிசார் மன்றில் அறிக்கையிட்டனர்.

கடந்த வழக்கில் முன்னிலையாகும் அறிவித்தல் தமக்கு கிடைத்திருக்கவில்லையென இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

அவர்களை பிணையில் விடுவித்து முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை 2024 ஜனவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Share:

Related Articles