குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களை முறையாகப் பராமரிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அதெனியி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பங்களிப்பில் நாட்டில் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வைப் பெற்று ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையின் வைத்தியசாலை அமைப்பு மற்றும் இலவச சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பையும், சுகாதார திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் சுகாதார சேவையில் சில பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதனை முறையாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.