NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய ஜீலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் மோதலில் உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டநிலையில் சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைதான இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்று (25) முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியமை மற்றும் ஆபத்தான விதத்தில் படகையோட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதவான் வழக்கை எதிர்வரும் ஜீலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழையும் போது கைது செய்யப்பட்டால் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதே வழமை என்கிற நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நேரடியாக பொலிஸார் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles