NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொமன்வெல்த் போட்டியை நடத்தும் அளவு நிதி எம்மிடம் இல்லை – அவுஸ்திரேலியா அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2026ஆம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நேற்று (17) விலகியுள்ளது.

இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் கொமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942ஆம், 1946ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி இரத்தானது.

கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22ஆவது கnhமன்வெல்த் விளையாட்டு போட்டி அரங்கேறியது.

அடுத்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 20 வகையான விளையாட்டுகளும், 9 வகையான பாரா போட்டிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் நேற்று அறிவித்தது. போட்டியை நடத்த தாங்கள் மதிப்பிட்ட அதற்கான வரவு, செலவு திட்டத்தை விட தற்போது அதிக தொகை பிடிக்கும் என்று தெரியவந்து இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விக்டோரியா மாகாண பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸ் கருத்து தெரிவிக்கையில், ‘அடுத்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு எனது அரசு கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது. அதற்காக எந்த விலை கொடுத்தாவது அதனை நடத்துவோம் என்று அர்த்தம் கிடையாது.

5 பிராந்திய நகரங்களில் இந்த போட்டியை நடத்த 2.6 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் தேவைப்படும் என்று முதலில் கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான தொகை 7 பில்லியன் அவுஸ்திரேலிய அதிகரிக்கும் என்று தெரியவருகிறது.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிக்காக நாங்கள் 7 பில்லியன் டாலரை செலவழிக்கும் நிலையில் இல்லை. இந்த தொகையை நாங்கள் செலவழித்தாலும் அதனால் எங்களுக்கு பெரிய அளவில் ஆதாயம் எதுவும் கிடைக்காது.

இதனால் இந்த போட்டியை நடத்துவதில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். இது குறித்து கொமன்வெல்த் விளையாட்டு அமைப்புடன் சுமுகமாக விவாதித்தோம். எங்கள் முடிவை தெரிவிக்கும் முன்பு போட்டியை மெல்போர்னுக்கு மாற்றலாமா? என்பது உட்பட எல்லா அம்சங்களையும் பரிசீலனை செய்தோம்’ என்றார்.

விக்டோரியா அரசின் திடீர் அறிவிப்பால் 202ஆ-ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு திட்டமிடப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles