இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான நீர் மின் நிலையங்கள் உட்பட அனைத்து சொத்துக்களையும் 14 தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு புதிய மின்சார சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில், உத்தேச புதிய மின்சார சட்டத்தின் பிரதியை ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைக்க உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களில் பெரும்பாலானோர்களின் தீர்மானத்தின்படி, மின்சார சபையின் மின்சார விநியோகத்திற்கு மாத்திரம் பொருந்தும் வகையில் முன்மொழிவுகளை தயாரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்தக் குழு தயாரித்த வரைவு சட்டமூலத்தின்; பிரதி இரகசியமான முறையில் தன் கைகளுக்கு வந்ததாக தெரிவித்த அவர், இதில் மிகவும் ஆபத்தான சில பரிந்துரைகளும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டமூலத்தின்படி, மின்சார சபைக்குச் சொந்தமான அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் 14 நிறுவனங்களாகப் பிரித்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்மொழியப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.