ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது கொள்கைகளை வெளிப்படுத்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வாய்ப்பளிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் தினித் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் நடுநிலையான தன்மையில் அனைவருக்கும் சமனிலையான வாய்ப்பளிக்கும் வகையில் அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வாய்ப்பளிக்கப்படுகிறது.
வாரத்தில் 7 நாட்களும் காலை 10 மணிக்கு, ஒரு வேட்பாளருக்கு ஒரு மணித்தியாலம், பிற்பகல் 2 மணிக்கு பிறிதொரு வேட்பாளருக்கு ஒரு மணித்தியாலம் என்ற அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
அத்துடன் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் அந்த வேட்பாளர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் தினித் கருணாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.