அன்று மக்கள்படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாஸவும், அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதிஇதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதே தான் செய்த முதல் காரியம் என்றும், அந்த 04 போகங்களையும் வெற்றியடையச் செய்ததன் மூலம் நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரித்ததாக குறிப்பிட்டார்.
அத்துடன், முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினை குறித்தும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விரும்பியோர் நல்லடக்கம் செய்யவும், தகனம் செய்யவும், மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கவும் முடியுமான வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.