NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு எமது அரசாங்கத்தில் இடமில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அழிக்கும் பதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

திங்கட்கிழமை (25) பிரதி அமைச்சராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பலவீனமே கடந்த காலங்களில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்ததில் செல்வாக்கு செலுத்தியது. நாட்டில் போதியளவு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அது மாத்திரமின்றி சட்டங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அழிக்கும் பதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு காணப்படுகிறது.

இவற்றை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியில் காணப்பட்ட தடைகள் தற்போது நீங்கியுள்ளன. எனவே இனியும் நாட்டில் சட்ட விரோத போதைப்பொருட்கள் இவ்வாறான காரணிகளால் கைப்பற்றப்படவில்லை எனக் காரணம் கூற முடியாது. அப்பாவி மக்களுக்கு நியாயத்தை வழங்க முடியவில்லை எனில் நாம் பதவிகளை வகிப்பதில் பிரயோசனமில்லை என்றார்.

Share:

Related Articles