சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் பெண் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (01) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் இரண்டு ஆண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து உயிரினங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து அரிய வகை ஆமைகள், நத்தைகள், மீன்கள், கடல் நத்தைகள், தவளைகள், கடலாமைகள் உள்ளிட்ட பல உயிரிழனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.